தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது. இது குறித்து வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆலை தொடர்ந்து 5 ஆண்டுகள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலையினை விற்பனை செய்து விடலாம் என்று வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக 2021ம் ஆண்டு ஆலையினை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது என்று கூறப்படுகிறது.
பல்வேறு கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் வேதாந்தா நிறுவனம்
தற்போது ஸ்டர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணியானது நடந்து வருகிறது. அங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அப்பகுதியினை சுற்றி காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கழிவுகள் அகற்றும் பணி நிறைவடைந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து வேதாந்தா நிறுவனம் முடிவு செய்யும் என்று தெரிகிறது. அதன்படி ஆலையினை விற்பனை செய்யவும் இந்நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பல்வேறு கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது வேதாந்தா நிறுவனம். இதனிடையே, ஸ்டர்லைட் ஆலையினை ஏலம் விட வங்கித்தரப்பு ரூ.4,500 கோடிக்கு விற்பனை செய்து நிதியினை திரட்ட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.