36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்
தனது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 36 மணிநேரமாக இந்தியாவில் சிக்கித் தவித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று கனடாவுக்கு புறப்பட்டார். ட்ரூடோ ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 8ஆம் டெல்லிக்கு வந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை அவர் கனடாவிற்கு திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது ஏர்பஸ் விமானத்தில் ஏற்பட்ட சிக்கலால் ட்ரூடோ இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவரை கனடாவுக்கு அழைத்து செல்ல இன்னொரு விமானம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அந்த விமானம் இடையிலேயே லண்டனுக்கு திருப்பிவிடப்பட்டது. அதற்கான காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த பிரச்சனைகளுக்கு இடையில், அவரது ஏர்பஸ் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டது.
கனடா பிரதமரை நேரில் சென்று வழி அனுப்பி வைத்த மத்திய அமைச்சர்
கனடா பிரதமர் அலுவலகத்தின்(PMO) செய்தித் தொடர்பாளர் முகமது ஹுசைன், விமானத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கப்பட்டு, விமானம் புறப்பட தயாராகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ட்ரூடோவைக வழி அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். "பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் அரசாங்கத்தில் உள்ள எனது சகாக்கள் சார்பாக, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்க நான் இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். மேலும், அவரும் அவரது குழுவும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று நான் வாழ்த்தினேன்," என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில்(எக்ஸ் தளம்) தெரிவித்துள்ளார்.