ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா, ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தலைவர் சங்கர் ஆதியாவுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அமலாக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த போதிலும், தனது கணவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி ஜோத்ஸ்னா ஆதியா கூறியுள்ளார். சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக மேற்கு வங்கத்தில் சங்கர் ஆதியா மற்றும் மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஹாஜஹான் ஷேக் ஆகியோரின் வீடுகளில் ED நேற்று சோதனை நடத்தியது.
நேற்று அமலாக்க அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
மேற்கு வங்காளத்தில் பயனாளிகளுக்கான பொது விநியோக முறையின்(PDS) ரேஷனில் இருந்து கிட்டத்தட்ட 30 சதவீத பொருட்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஹாஜஹான் ஷேக் வீட்டுக்கு விசாரிக்க சென்ற அமலாக்க அதிகாரிகள் மீது சந்தேஷ்காலியில் உள்ள சஹாஜஹான் ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகளின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 800-1,000 பேர் கொண்ட குழு கொலை செய்யும் நோக்கத்துடன் நேற்று தாக்குதல் நடத்தியதாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.