திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது
திருச்சி மாவட்டம் உப்பிலியப்புரத்தினை அடுத்த வலையப்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் தேவி(43). இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் சித்திரப்பட்டி என்னும் பகுதியில் தங்கியிருந்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தேவி பணிபுரியும் அதே பள்ளியில் பயிலும் துறையூரினை சேர்ந்த 16 வயதுடைய 10ம் வகுப்பு மாணவர் ஒருவன் அவரிடம் டியூஷன் படித்து வந்ததாக தெரிகிறது. அந்த மாணவனிடம் தேவி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மாணவனின் நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தங்கள் மகனின் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்கள்.
திருச்சி சிறையில் ஆசிரியை அடைப்பு
அதன்படி அந்த மாணவன் அந்த ஆசிரியையான தேவியிடம் படிப்பில் கவனம் செலுத்தாமல் இரவு நேரங்களில் அதிக நேரம் பேசி வருவதை பெற்றோர்கள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் கடந்த 27ம் தேதி தனக்கு அந்த ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை தேவி மீது புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் ஆசிரியை தேவியின் மீது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.