
300 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வாழ்வளித்த திருச்சி தாய்
செய்தி முன்னோட்டம்
திருச்சியை சேர்ந்த செல்வ பிருந்தா என்ற தாய், கடந்த 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கி, ஆயிரக்கணக்கான குறைமாத மற்றும் ஆபத்தான நிலை கொண்ட குழந்தைகளுக்கு உயிர்கொடுத்துள்ளார். 2023-24 ஆண்டில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலில், கிட்டத்தட்ட பாதியிற்கும் மேற்பட்ட பங்களிப்பு செல்வ பிருந்தாவால் வழங்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிருந்தா, ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலத்தில் இந்த தன்னலமற்ற சேவையை மேற்கொண்டுள்ளார்.
சாதனை
இந்தியா மற்றும் ஆசியா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்
அவரது தொடர்ச்சியான சேவை, ஒரு அரசு சாரா நிறுவனத்தின் ஊக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக, அவர் 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பால் வங்கியின் அதிகாரிகள், வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் 'உலக தாய்ப்பால் வாரம்' நிறைவு விழாவில், செல்வ பிருந்தாவை சிறப்பு விருந்தினராக அழைத்து பாராட்ட இருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டம், 300 லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை பால் வங்கிக்காக வழங்கியுள்ள இதுவே முதல் முறை எனவும், இது மாநிலத்துக்கே பெருமை சேர்த்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.