குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்
தமிழக காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர்,"நான் எனது பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். எனது தனிமையினைப்போக்க ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவுச்செய்து டெல்லி மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன்மூலம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நான் ஒரு திருநங்கை என்னும் காரணத்தினால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது"என்று தெரிவித்திருந்தார். மேலும் தனது விண்ணப்பத்தினை ஏற்று, தத்தெடுப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். அதேபோல் சிறார் தத்தெடுப்பு விதிகளில் பாலின வேறுபாடு ஏதும் குறிப்பிடப்படவில்லை. குழந்தையினை நல்ல விதத்தில் வளர்க்கக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதே விதிமுறைகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னை நீதிமன்ற நீதிபதி மீண்டும் இன்று விசாரணை மேற்கொண்டார்
தொடர்ந்து அந்த மனுவில், அப்படி பார்த்தால் தான் ஒரு அரசாங்கப்பணியில் உள்ளதால் தன்னால் குழந்தையினை நல்லமுறையில் வளர்க்கமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இம்மனு கடந்த ஜூன் 23ம்தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவினை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அப்போது அவர், இது குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் மத்திய குழந்தை தத்தெடுப்பு வள ஆணையத்திற்கு ஒரு வார கால அவகாசத்தினை அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கானது இன்று(ஜூன்.,30) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே ஒரு வார கால அவகாசம் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்துக்கும் மேலும் 2 வார கால அவகாசத்தினை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.