பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் அவர் தேர்வானது குறித்து சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் பயிற்சி இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக அவர் போலியான ஊனமுற்றோர் சான்றிதழ்களை வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பூஜா கேத்கரின் மாவட்ட பயிற்சித் திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் தேவையான நடவடிக்கையை எடுக்க அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்(LBSNAA) தெரிவித்துள்ளது.
பூஜா கேத்கர் எப்படி சிக்கினார்
கேத்கர் சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்காக அவர் போலியான சான்றிதழ்களை உருவாக்கி ஊனமுற்றோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம், பூஜா கேத்கரின் வேட்புமனுவை சரிபார்க்க ஒற்றை உறுப்பினர் குழுவை மத்திய அரசு அமைத்தது. 2023-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், முதலில் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கினார். அதன் பிறகு, அவரது சாதி சான்றிதழும் மாற்றுத்திறனாளி சான்றிதழும் போலியானது என்பது தெரியவந்தது.