தெலுங்கானா: தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், டெல்லி வியாபாரிகள் தக்காளியினை தென்னிந்தியப்பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து வருகிறார்களாம். அதன்படி கர்நாடாகாவிலிருந்து நேற்றுமுன்தினம் டெல்லிக்கு 638 பெட்டிகளில் சுமார் ரூ.25லட்சம் மதிப்புள்ள 16டன் எடைகொண்ட தக்காளியினை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது தெலுங்கானா-அதிலாபாத் நெடுஞ்சாலை அருகில் சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினைமீறி லாரி சாலையோரமுள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்துள்ளது. அப்போது லாரியிலிருந்து சிதறிய தக்காளிகளை எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் முயற்சித்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவால காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்துப்போலீசார் விரைந்துச்சென்று யாரும் தக்காளியினை எடுக்காமலிருக்க துப்பாக்கி ஏந்தியநிலையில் பாதுகாப்பு அளித்துள்ளார்கள். பின்னர்,நேற்று(ஜூலை.,15)மாலை மாற்று லாரி கொண்டுவரப்பட்டு தக்காளிகள் அனைத்தும் பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.