புதுவையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆப்ரேஷன் 'விடியல்' திட்டம்
புதுவையில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு போன்ற வழக்குகளின் விசாரணைக்கு காவல்துறையில் மோப்ப நாய்கள் உள்ளது. ஆனால் போதை பொருட்களை கண்டறிய மோப்ப நாய்கள் இல்லை. இதனால் லேப்ரடார் என்னும் வகையினை சேர்ந்த நாயினை காவல் துறையினர் வாங்கி அதற்கு பைரவா என்னும் பெயரினை வைத்து, கோவையில் உள்ள தமிழக காவல்துறை மோப்ப நாய் பயிற்சி மையத்தில் விட்டனர். அந்த நாய் குட்டிக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 9 மாத குட்டியாக இருக்கும்போது பயிற்சிக்கு விடப்பட்ட பைரவர் தற்போது பயிற்சிகளை முடித்து புதுவை காவல்துறையில் சேர்த்து கொள்ளப்பட்டது. இதனையடுத்து வாரம் ஒருமுறை புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விரைவு ரயிலில் பயணிகள் ஏதேனும் போதைப்பொருட்களை எடுத்து வருகிறார்களா என சோதனை செய்வர்.
தடை செய்யப்பட்ட டொபாகோ பொருட்களை கண்டறிந்த பைரவர்
இந்த சோதனையினை ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், ரயில்வே போலீஸ் ஆகியோர் பைரவர் என்னும் அந்த மோப்ப நாய் உதவியோடு சோதனையினை நடத்துவர். அவ்வாறு சோதனை நடத்துகையில், பயணிகளின் உடைமைகளை மோப்பம் பிடித்தபடி பைரவா சென்றது. அதில் சந்தேகத்திற்குரிய பைகளை சரியாக கண்டறிந்து குரைத்து அடையாளம் காண்பித்தது. அந்த குறிப்பிட்ட பைகளை போலீசார் சோதனை செய்த பொழுது அதில் போதை பொருட்கள் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட டொபாகோ பொருட்கள் இருந்துள்ளது. பின்னர் அந்த பையினை எடுத்து வந்த 2 வாலிபர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த மோப்ப நாய்க்கு பயிற்சி கொடுத்த திட்டத்தின் பெயரே ஆப்பரேஷன் 'விடியல்' என்பது குறிப்பிடத்தக்கது.