
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
முக்கிய அறிவுறுத்தல்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது: குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், திறந்தவெளியில் நலச்சங்கங்கள் வாயிலாகப் பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு வெடிக்க முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.