தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. இதனால் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசென்றனர். இந்நிலையில் தைப்பூசதிருவிழா நாளன்று காலை கல்லூரி பெண்கள் சிலர் கோயிலுக்கு வந்துள்ளார்கள். அவர்களோடு பர்தா அணிந்த பெண் ஒருவரும் வந்துள்ளார். உள்ளே நுழைந்த அவர் சாமிதரிசனம் செய்ததோடு, கோயில் வளாகத்தில் பல இடங்களில் புகைப்படமும் எடுத்துள்ளார். கோயில் பணியாளர்களும் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் இருந்துள்ளார்கள். இதனைதொடர்ந்து தகவலறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் கோயிலுக்குள் வந்ததும் அந்த பெண் அங்கிருந்து உடனே கிளம்பியதாக கூறப்படுகிறது. நெல்லையப்பர் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் புகாரளித்துள்ள நிலையில், இதற்கு நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
ஆகமவிதிகள் குறித்த அறிவிப்பினை கோயில்களில் மீண்டும் வைக்க மாநில இந்து முன்னணி தலைவர் கோரிக்கை
மேலும் இந்த சர்ச்சை குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, விடுமுறை தினம் என்பதால் கல்லூரி மாணவிகளோடு அப்பெண் வந்திருக்கலாம், ஆனால் அவர் மண்டபம் தாண்டி உள்ளே செல்லவில்லை என்று கூறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில், இந்து கோயில்களில் ஆகமவிதிகள் படி கொடிமரம் முன்பு இந்துக்கள் அல்லாதோர் உள்ளே செல்லக்கூடாது என்ற அறிவிப்பு இருக்கும். தற்போது அது பல கோயில்களில் அகற்றப்பட்டுள்ளதால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. எனவே மீண்டும் இது போன்ற அறிவிப்புகளை கோயிலில் வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தினை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.