தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் STEAM திட்டம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய மாற்றங்கள் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது. இனி அரசுப் பள்ளிகளில் குழந்தை மையக் கல்வியாக மாறப்போகிறது" எனப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருந்தோம், இன்று நிலாவிற்கே சந்திராயனை அனுப்பிவிட்டோம். முன்பு வாசலில் தள்ளுவண்டியில் பொருட்கள் விற்றார்கள், இன்று ஷாப்பிங் மால்களில் நம்ம கையிலேயே ட்ராலியைக் கொடுத்துவிட்டார்கள். உணவுப் பழக்கம், நடையுடை பாவனை என எல்லாமே மாறிவிட்டன. காலம் மாறிவிட்டதால், தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது" என்றார்.
மாற்றங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்த முக்கிய மாற்றங்கள்
கணிதப் பாடங்கள் இனி கடினமாக இருக்காது. ஒவ்வொரு கணித வகுப்பும் கதைகள் சொல்லும் பாணியில் சுவாரஸ்யமாக நடத்தப்படும்.
அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கணிதம் (Maths) ஆகியவற்றுடன் கலைகளையும் (Arts) இணைத்து STEAM கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் அதிகப் படங்களுடன் கூடிய எளிய வடிவத்திற்கு மாற்றப்படும்.
"அதனால் AI-ஐ பார்த்து பயப்பட வேண்டாம். Prompt Engineering கற்றுக் கொண்டால் போதும். மாணவர்களுக்கு AI-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என பயிற்சி அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
உருவக் கேலி
உருவக் கேலிக்கு முற்றுப்புள்ளி
அமைச்சர் மேலும், "பள்ளிகளில் ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ, சக மாணவர்களோ குழந்தைகளை 'கருப்பா', 'பல்லா', 'குள்ளா' என உருவத்தைக் கேலி செய்து கூப்பிடக் கூடாது. அது மாணவர்களை மனரீதியாகப் பாதிக்கும் என்பதால் இது கடுமையாகக் கண்காணிக்கப்படும்" என எச்சரித்தார்.
"அடித்துச் சொல்லிக் கொடுத்த காலம் போய்விட்டது. ஆடி சொல்லிக் கொடுங்கள், பாடி சொல்லிக் கொடுங்கள்" என ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
கற்றலை மாணவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்று கூறிய அமைச்சர், இந்த புதிய பாடத்திட்ட மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என உறுதியளித்தார்.