ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நெய்வயல் என்னும் கிராமத்தில் உள்ள ஜீவா(33) என்பவர் மீது உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. தலித் நபர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு பின்னரே இதுதொடர்பாக துவாடனை போலீசார் நேற்று(பிப்.,24) அந்த கும்பல் மீது வழக்குபதிவு செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள உயர்சாதியை சேர்ந்த 17வயது இளைஞர் ஒருவன் குடிபோதையில் ஜீவாவின் உறவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜீவா அந்த இளைஞரின் குடும்பத்தை அணுகி பிரச்சனையை சமாதானமாக பேசி தீர்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இந்த இளைஞர் தனது கூட்டாளிகளோடு சென்று ஜீவாவையும் அவரது நண்பர் சுரேஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஜீவாவை கொடூரமாக தாக்கிய சாதிவெறி கொண்ட 11 பேர்
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலில் 3 சிறார்களும் இடம்பெற்றுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீவாவை தேடி பிடித்த அந்த கும்பல் கடந்த 19ம் தேதி மாலை அவரை கண்டறிந்து, யாருமில்லா பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கியுள்ளார்கள். அவரது சாதியை சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதோடு, அவர் மேல் சிறுநீறும் கழித்துள்ளார்கள். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஜீவாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். இதனையடுத்து ஜீவா அளித்த புகாரின் பேரில் எட்டு இளைஞர்கள் மற்றும் 3 சிறார்கள் கொண்ட அந்த கும்பல் மீது ஐபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.