காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராவிதமாக ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான அந்த 2 சிறார்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், நெல்வாய் கிராமத்தினை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் குழந்தைகளான விஜய்(7) மற்றும் பூமிகா(4) ஆகியோர் கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாலையில் நெல்வாய் ஏரியில் எதிர்பாரா விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்னும் துயர செய்தியினை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துகேகொள்கிறேன். அவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விபத்தில் பலியாகும் சிறுவர்கள்
தொடர்ந்து இது போல நீரில் மூழ்கி பலியாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிக்கு சென்ற மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், சிறுவர் சிறுமிகள் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், நீச்சல் குளத்தில் விளையாடும் போது, கடற்கரையில் விளையாடும் போதும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.