தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து புத்தங்கங்களையும் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த நூலகத்திற்கு அடிப்படை வசதியும் செய்துதர வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற இதன் விசாரணையின் போது மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் தற்போது 26,035 புத்தகங்கள் இருப்பதாகவும் அந்த நூலகத்தை அமைக்க இதுவரை ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர், நீதிமன்ற விசாரணையில் கூறினார். இதனால், இந்த மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், "தமிழ் வளர்ச்சிக்கு தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். மேலும், தமிழ் இலக்கியங்களைப் பிரபலப்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.