அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகிறது. இது குறித்து தமிழக அரசு தொடர்ந்து பலதரப்பட்ட கட்டுப்பாடுகளையும், விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, காது பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் செய்ய வேண்டும் என்னும் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 50 வயதுக்கு குறைந்த ஓட்டுநர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கண், காது பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிப்பு
அதே போல், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் 1 ஆண்டுக்கு ஒரு முறை கண், காது போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குறிப்பில், சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம்நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் மருத்துவப்பரிசோதனைகளில் வரும் அறிக்கையில் ஓட்டுநர்கள் உடல் நலம் தகுதியற்றதாக தெரிவிக்கப்பட்டால் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண், காது மருத்துவ பரிசோதனைகளில் தகுதியற்றவர்களாக கண்டறியப்படுபவர்கள் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளில் அதே சம்பளத்தில் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.