
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க அரசு பரிசீலனை - அமைச்சர் சி.வி. கணேசன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழ்த்திரடல் கட்சி எம்எல்ஏ தி. வேல்முருகன் பேசும்போது, "வெளிமாநிலத் தொழிலாளர்களால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, அவர்கள் எந்த வேலைக்காக வருகிறார்கள், எங்கு பணியாற்றுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு செல்கிறார்கள் என்பதனை கண்காணிக்க தனி அமைப்பு தேவை" என்றார்.
அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியனும், "வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குப் பத்திரமான அடையாள அட்டை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அரசு பதில்
முறைசாரா வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி. கணேசன், "மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொழிலாளர் வருகை பதிவு செய்யும் போர்ட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலத்துறை இணை மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களிலும் பதிவு நடை பெறுகிறது".
"நகைக்கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் அரசு பரிசீலனையில் உள்ளது" என்று தெரிவித்தார்.