கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்
கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இந்த நோயால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் மக்களால் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. அதன்பின்னர் தடுப்பூசி கண்டறியப்பட்டு அதன் மூலம் தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஓரளவுக்கு இந்த நோயானது கட்டுக்குள் வந்தது. தடுப்பூசி வந்த பின்னரே ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக வந்தது. 2020ம்ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30வரை இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அரசு தரப்பினர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகவே அரசு பணியாளர்கள் பணிக்கு வராமல் இருந்தனர்.
அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை
இதனையடுத்து கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை செய்தது. இந்நிலையில் அவர்களின் கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தினை சிறப்பு விடுப்பாக அறிவிப்பதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.