டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று(ஜூலை.,7) புறப்பட்டு 7 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இன்று(ஜூலை.,8) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து பேசியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் அமித்ஷா இல்லத்திற்கே நேரடியாக சென்ற ஆளுநர், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் நடந்த இந்த அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆளுநர் அமித்ஷாவுடன் விவாதித்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இதனோடு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள திமுக அரசு அனுமதி கோரியுள்ள கடிதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உத்தரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீடு
தமிழகத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே, தமிழக அரசு அவரை இலாகா இல்லா அமைச்சராக அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியினை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தினை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சில மணிநேரத்திலேயே, ஆளுநர் தனது உத்தரவினை நிறுத்திவைப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையீடு காரணமாகவே ஆளுநர் தனது உத்தரவினை நிறுத்தி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.