தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம் தேதி முதல் 2,811 மின் பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. இந்த இணைப்பிற்கான கடைசி நாள் டிசம்பர் 31ம் தேதி என்று கூறப்பட்டு, பின்னர் ஜனவரி 31ம் தேதி என்று மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்திருந்தது.
7 லட்சம் பேர் இணைக்கவேண்டியுள்ளதால் கால அவகாசம் நீட்டிப்பு
அதன்படி தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில், மீண்டும் இதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளார்கள். மேலும் 7 லட்சம் பேர் இணைக்கவேண்டியுள்ளது. அவர்களுக்காக பிப்ரவரி 28ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இனியும் நேரம் கொடுக்க முடியாது, இன்னும் 13 நாட்களுக்குள் இணைப்பினை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.