இனி குழப்பமே வேண்டாம்! EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் 'கலர் போட்டோ': தேர்தல் ஆணையர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில்(EVM) வேட்பாளர்களின் பெயருடன் அவர்களின் கலர் புகைப்படங்களும் இடம்பெறும். தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18-19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 12.5 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை மற்றும் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.
வாக்காளர்
வாக்காளர்களுக்கு பெயர் சேர்க்க வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியுள்ள நபர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையர் தெரிவித்தார். பெயர் சேர்க்க 'படிவம் 6', நீக்கம் செய்ய 'படிவம் 7' மற்றும் திருத்தங்களுக்கு 'படிவம் 8' ஆகியவற்றை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், அதிகாரிகள் அச்சமின்றி தங்கள் கடமையை செய்யலாம் என்றும் அவர் உறுதியளித்தார். ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.