தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஏதுவாக வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தற்போது ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத்துறையின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்படி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நடக்கும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(ஜூன்.,9) நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார் என்று முன்னதாக கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடி பகுதிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்று முதலை முத்துவாரியில் நடக்கும் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்துள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதனை தொடர்ந்து அவர், விண்மங்கலம் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்கிறார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து திருச்சி மாவட்டத்திற்கு சென்று செங்கையூர் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து திருச்சி லால்குடியினை அடுத்துள்ள புள்ளம்பாடியில் கூழையாற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதோடு நத்தம், வெங்கடாசலபுரம் இருதயபுரத்தில் நந்தியாற்றில் நடக்கும் பணியினையும் பார்வையிடுகிறார். பின்னர் திருச்சியிலேயே தனது மதிய உணவினை அருந்திவிட்டு, மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைகிறார் என்று கூறப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.