முதல்வரின் 'காலை உணவு திட்டம்' விரிவாக்கம் - கூடுதல் அதிகாரிகளை நியமிக்க உத்தரவு
தமிழகத்திலுள்ள 1,978 துவக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தினை ஆகஸ்ட் 25ம்தேதி முதல் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவுச்செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது. முன்னாள் முதல்வர்-கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர்-திருகுவளையில் முதல்வர் இந்த காலை உணவுத்திட்ட விரிவாக்க நிகழ்வினை துவக்கிவைக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இத்திட்டத்தினை கண்காணிக்க தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்த காலை உணவுத்திட்டத்தில் காய்கறிகளுடன் கூடிய100மி.லி.,சாம்பார், 150-200கிராம் உணவு வழங்கப்படும், வாரத்திற்கு 2 நாட்கள் உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்கள் கொண்டு காலை உணவு 8மணிமுதல்-8.50மணிக்குள் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.