Loading...
தமிழக பட்ஜெட் 2026-27: சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்
பட்ஜெட்டில் சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழக பட்ஜெட் 2026-27: சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
01:47 pm

செய்தி முன்னோட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கில், தமிழக பட்ஜெட்டில் சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க 'அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை' திட்டத்திற்கு ரூ.131 கோடியும், தொழில்முனைவோரை உருவாக்க 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்' திட்டத்திற்கு ரூ.125 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'வெற்றி தொழில்முனைவோர்' திட்டத்திற்கு ரூ.75 கோடியும், 'அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு' திட்டத்திற்கு ரூ.300 கோடியும் வழங்கப்படவுள்ளது.

மேம்பட்டு திட்டங்கள்

'மண்ணின் மகள்' மற்றும் 'ஆன்றோர் மேம்பாட்டு' திட்டம்

பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில் 'மண்ணின் மகள்' என்ற புதிய திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் 'ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்' ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் ரூ.25,225 கோடியும், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின்கீழ் ரூ.2,079 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும் என்றும், சமூக நீதித் துறைக்கு திருத்த மதிப்பீட்டில் ரூ.3,935 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் கல்விக்காக ரூ.372 கோடி கல்வி உதவித்தொகையாகவும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கட்டணத்திற்காக ரூ.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத்தொகையாக ரூ.13.41 கோடி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT