கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்: பட்ஜெட்டில் அதிரடி
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் என மொத்தமாக ரூ.52,920 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் 'வெற்றி மடிக்கணினி' திட்டத்திற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11-ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு தலைக்கவசம் (Helmet) மற்றும் குடிநீர் பாட்டில்களுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு
அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.2,132 கோடியும், பாடத்திட்டங்களைச் சீரமைக்க ரூ.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடியும், மதுரையில் 300 மாணவர்கள் சேர்க்கை வசதியுடன் புதிய சட்டக் கல்லூரி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்த 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 லட்சம் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் 'வெற்றி திறன் பயிற்சி' திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விளையாட்டு நேரம்
பள்ளிகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க ரூ.7 கோடியில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, புகார் அளிக்க '1058' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி நேரம் முடிந்தபிறகு தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களின் விளையாட்டு பயிற்சிக்காக கட்டாயமாக ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.