'அண்ணன் சீர்' திட்டம்: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்குத் திருமண உதவி வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்காக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, 2026-27 ஆம் நிதியாண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ், பெண்களின் திருமண நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' என்ற சிறப்பான நலத்திட்டம் சேர்க்கப்பட்டு, அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவரங்கள்
8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை உதவி
மாநிலத்தின் அனைத்துப் பெண்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாக கருதும் வகையில், அவர்களின் திருமண நாளில் அரசு சார்பாக 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயமும் உயர்தர பட்டுப்புடவையும் 'அண்ணனின் சீராக' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மகளிரின் திருமண செலவை குறைக்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை தடங்கலின்றி செயல்படுத்துவதற்காக நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் ரூ. 812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடும்ப பொறுப்புகளை உணர்ந்து பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மகளிர்க்கும் இத்திட்டம் முழுமையாகப் பொருந்துமா என்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அரசாணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.