LOADING...
சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி
சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை

சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2026
12:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், "மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் நான் ஏதோ சூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் பேசுகிறார். சினிமா என்பது ரீல், இது ரியல். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பே காரணம்" என்று குறிப்பிட்டார்.

வெளிநடப்பு

முதல்வர் உரையின் போதே திமுகவினர் வெளிநடப்பு

மேலும், விஜய்,"ஒரே ஒரு குடும்பம் மட்டும் முக்கியம் என்று நினைப்பது நம் ஆட்சியல்ல; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். இது மன்னராட்சி இல்லை, மனசாட்சியுடைய மக்களாட்சி" என்றும் சாடினார். டாஸ்மாக் நிர்வாகத்தில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து முதல்வர் விஜய் பேசத் தொடங்கிய போது,"டாஸ்மாக் வருவாய் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் நிதியாக இருந்தது" என்று குறிப்பிட்டார். இதற்கு திமுக MLA-கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் முழக்கமிட்டனர். தொடர்ந்து பேசிய முதல்வர்,"மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட நாம் தொட மாட்டோம்; பிறரையும் தொட விட மாட்டோம்; தொட்டவர்களையும் சும்மா விட மாட்டோம்" என்று ஆவேசமாக முழங்கினார். இதனைத்தொடர்ந்து திமுகவினர் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

குட்டி ஸ்டோரி

அவையை அதிரவைத்த முதலமைச்சரின் 'குட்டி ஸ்டோரி'

திமுகவினர் வெளிநடப்பு செய்த பிறகும், முதல்வர் விஜய் தனது வழக்கமான பாணியில் ஒரு குட்டி ஸ்டோரியைக் கூறி உரையை நிறைவு செய்தார். "ஒரு வயதான முதியவர் கடுமையான வெயிலில் நெற்றியில் கை வைத்துக்கொண்டு எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று, 'பெரியவரே, என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்டான். அதற்கு அந்த முதியவர், 'உங்க அப்பாவை எங்கே காணோம் என்று தேடுகிறேன்' என்றாராம். எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பேசுவதைப் பார்த்தால், இந்த முதியவர் சம்பந்தமே இல்லாமல் தேடுவதைப் போலத்தான் இருக்கிறது. நானும் அவர்களைப் போல இப்படிச் சம்பந்தமில்லாத கதைகளைப் பேச முடியும்" என்று நக்கலாக கூறித் தனது உரையை முடித்தார்.

Advertisement

சமூக நீதி

சமூக நீதி குறித்து எதிர்க்கட்சிகளுக்குச் சவால்

அவையில் சமூக நீதி குறித்துப் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளை நோக்கிப் பல காரசாரமான கேள்விகளை எழுப்பினார். "சமூக நீதி அரசு என்று தங்களைச் சொல்லிக் கொள்வோரைப் பார்த்து நான் கேட்கிறேன், நீங்கள் எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்? தற்போதைய தவெக ஆட்சியில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளோம். அதேபோல், பட்டியலின சமூகத்தினருக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது தவெக அரசில் 8 பட்டியலின சமூகத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கி உண்மையான சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Advertisement

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர்

மேலும், அவையில் கூச்சலிட்ட எதிர்க்கட்சியினரை நோக்கி, "ஷோபா செட், பர்னிச்சர் பிஸினஸ் எல்லாம் வெளியே பண்ணுங்கள்; சட்டசபையில் வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துக்களைச் சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என்றும், "கடந்த 9 மாதங்களாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியே இல்லை. 2026 மே மாதத்தில் இந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எல்லாம் புதிதாக உருவாகவில்லை, இதெல்லாம் கடந்த கால ஆட்சிகளிலேயே இருந்தது" என்றும் சாடினார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகத்திற்காக பேசிய விபரங்களை முதல்வர் அவையில் பட்டியலிட்டார். வறுமையற்ற தமிழ்நாடு உருவாக தேவையான நிதி, தமிழகத்திற்கு கூடுதலாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கவும் கோரிக்கை, மேகதாது அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கான கல்வி நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மொழிக் கொள்கை

கொள்கை நிலைப்பாடுகளும் விவசாயக் கடன் தள்ளுபடியும்

தவெக அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் முதல்வர் விஜய் தனது உரையில் தெளிவுபடுத்தினார். இருமொழிக் கொள்கையில் தங்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதுதான் அரசின் வழக்கம் என்றும், இதில் தவெக அரசின் நிலைப்பாடு மத்திய அரசிடம் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். நீட் தேர்வை பொறுத்தவரை, மருத்துவப் படிப்பு சேர்க்கை 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். மத்திய அரசுடனான உறவு குறித்துப் பேசுகையில்,"பாஜகவுடன் நேர் எதிராக நிற்பவர்கள் தான் நாம். அதற்காக எதற்கெடுத்தாலும் எதிர்ப்பதில்லை, மக்களின் நலன் தான் நமக்கு முக்கியம்" என்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

Advertisement