LOADING...
விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கெல்லாம் உண்டு? யாருக்குக் கிடையாது? வெளியான முக்கியத் தகவல்
விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்த முழு தகவல்

விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கெல்லாம் உண்டு? யாருக்குக் கிடையாது? வெளியான முக்கியத் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், நேரு மைதானத்திலிருந்து நேராக தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளைத் தொடங்கினார். அங்கு அவர் மக்கள் நலன் சார்ந்த மூன்று முக்கியக் கோப்புகளில் தனது முதல் கையெழுத்துகளை இட்டார். அதில் முதன்மையானது '200 யூனிட் இலவச மின்சாரம்' வழங்கும் திட்டம்; இரண்டாவதாகப் பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண்கள் சிறப்பு படை' உருவாக்கம்; மூன்றாவதாக மாவட்டந்தோறும் 'போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்' குறித்த அதிரடி உத்தரவு. இதில் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், தமிழகத்தில் குடும்பத்தினரின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரம்

யாருக்கெல்லாம் இந்தச் சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் அதனை 200 யூனிட்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவசச் சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அரசாணையின்படி, ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தினர் தங்களது மின் பயன்பாட்டை 500 யூனிட்டிற்குள் கட்டுக்குள் வைத்திருந்தால், அவர்கள் தங்களது மொத்தக் கணக்கீட்டில் 200 யூனிட்டிற்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. இது ஏழை எளிய மக்களின் மாதாந்திரச் செலவில் ஒரு குறிப்பிடத்தக்கத் தொகையைச் சேமிக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சிக்கல்

யாருக்கு இந்தச் சலுகை கிடைக்காது? 500 யூனிட் நிபந்தனைக்கு பின்னாலுள்ள சிக்கல் என்ன?

முதல்வர் விஜயின் இந்த புதிய திட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நிபந்தனை பலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இரண்டு மாத மின் பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் (உதாரணமாக 501 யூனிட்) செல்லும் நுகர்வோர்களுக்கு இந்த 200 யூனிட் இலவசச் சலுகை வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் அனைவருக்கும் இலவசமாகக் கிடைத்து வந்தது. ஆனால், முதல்வர் விஜயின் புதிய திட்டத்தில் 500 யூனிட்டைக் கடந்தால் முழுச் சலுகையும் ரத்தாக வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், அதிக மின்சாரம் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினரைச் சற்றே ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

Advertisement

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய அறிவிப்பும்: மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள்

தேர்தல் வாக்குறுதியில் "தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை முதல்வர் விஜய் அளித்திருந்தார். ஆனால், தற்போது அதில் '500 யூனிட் வரம்பு' கொண்டு வரப்பட்டிருப்பது, வாக்குறுதியில் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், மின்சார வாரியத்தின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, உண்மையிலேயே தேவைப்படும் ஏழை மக்களுக்கு மட்டும் இந்தச் சலுகையை முழுமையாகக் கொண்டு சேர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதர அறிவிப்புகள்

சிங்கப்பெண்கள் சிறப்பு படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு: விஜய்யின் அடுத்தகட்ட அதிரடிகள்

இலவச மின்சாரத் திட்டம் ஒருபுறம் பேசுபொருளாக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பிற்காக முதல்வர் விஜய் அறிவித்துள்ள 'சிங்கப்பெண்கள் சிறப்பு படை' பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தைச் சீரழித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் சிறப்புத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளது, அவரது நிர்வாகத் திறமையைக் காட்டும் முதல் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே மக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை மையப்படுத்தி விஜய் எடுத்துள்ள இந்த முடிவுகள், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement