கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
திருவள்ளூர் பகுதியில் உள்ள அதிகத்தூர் என்னும் பகுதியில் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி போடுவதில் தேர்ந்த கைவினை கலைஞர்களாக உள்ள கொத்தடிமை தொழிலாளர்களுக்காக சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு காலத்தில் செங்கல் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும் கடினமாக உழைத்து முதலாளிகளுக்கு அடிமையாக இருந்து வந்த மக்கள் தற்போது தங்களுக்கு பிடித்த தொழிலினை செய்து தங்களுக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள். மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியாக 'சிறகுகள்' என்னும் அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மக்கள் மத்தியில் இவர்களது தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், அந்த பொருட்களுக்கான சிறந்த சந்தை விலையினை பெறவும் இந்த 'ஜாரி' அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கிய திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்
இந்த அமைப்பின் மூலம் கொத்தடிமையாக ஒருவருக்கு கீழ் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தற்போது சுயமாக ஓர் தொழிலை செய்து கவுரவமாக வாழ துவங்கியுள்ளார்கள். அல்லிப்பூக்கள் மற்றும் சாமந்தி பூ என்னும் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் 'ஜாரி' திட்டத்திற்காக அடையாளம் கண்டு அவர்கள் மூலம் தொழிலாளர்களின் திறனை வெளிக்கொண்டுவர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை விளம்பரப்படுத்த இதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இன்ஸ்டாக்ராம் பக்கத்தினை உருவாக்கியுள்ளது. மேலும் இதற்கான இணையத்தளத்தை உருவாக்குதல், இ-காமர்ஸ் தளங்களை கையாள சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், போன்ற பல திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.