திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசரணையினை சிபிசிஐடி மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சம்பவம் நடந்தபொழுது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்பட 10 காவல்துறையினருக்கு கடந்த வாரம் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இந்த சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்பட 10 போலீசார் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். அதன் படி நேற்று(மே.,29) திருநெல்வேலியிலுள்ள சிபிசிஐடி(ஓசியூ) அலுவலகத்தில் ரகசிய விசாரணையினை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ளனர். மாலை 4 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை இரவு 7 மணிவரை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போல் நேற்று மாலை மற்றொரு சிபிசிஐடி குழு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து 5 மணி முதல் 8 மணி வரை ரகசிய விசாரணை நடத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இன்று(மே.,30) வி.கே.புரம் காவல்நிலையத்தில் வேத நாராயணன், பற்கள் பிடுங்கப்பட்ட பொழுது பணியில் இருந்த காவலர்களை விசாரிக்க திருநெல்வேலி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவித்துள்ளார்.