சைகை மொழியில் திருக்குறள் காணொளியை வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு
திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை சைகை மொழியில் காணொளியாக வெளியிட செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழ் மொழியில் உள்ள செவ்விலக்கியங்களையும், அவற்றின் சிறப்புகளையும் ஆய்வு செய்யும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், அவற்றை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணிகளையும் செய்து வருகிறது. அதன்படி உலகப் பொதுமறையான திருக்குறளையும் 36 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மேலும், பார்வையில்லாதவர்கள் படிக்கும் வகையில் பிரெய்லி வடிவத்திலும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது காது கேளாதோரும் திருக்குறளை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் வகையில், திருக்குறளின் முன்னுரை, குறள்கள் மற்றும் விளக்கம் ஆகியவற்றை சைகை மொழியில் காணொளிகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
செம்மொழி தமிழாய்வு பதவி நியமன சர்ச்சை
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் சமீபத்தில் துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டார். இவர் முன்னர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் ஆவார். இவரது செயல்பாடுகள் அனைத்தும் திராவிட சிந்தனைகளுக்கு எதிரானவை எனக் கூறப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராக இருக்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சுதா சேஷய்யனின் நியமனம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக, திராவிட சிந்தனைகளுக்கு எதிராக இருப்பதோடு, ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் இவர் ஆதரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள திராவிட சிந்தனை கொண்ட கல்வியாளர்கள் இந்த நியமனத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.