வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா என்னும் அங்கீகாரத்தினையும், அதற்கான விருதினையும் அண்மையில் பெற்றுள்ளது. இந்த பூங்காவிற்கு சராசரியாக வார நாட்களில் 2000-3000பேர் வரை வந்து செல்லும் நிலையில், வாரயிறுதி நாட்களில். கிட்டத்தட்ட 10,000 சுற்றுலா பயணிகள் வரை வருகிறார்கள். 602 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் 2,400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதில் 42 வகை விலங்குகள் மாமிசம் உண்ணும் வகையினை சேர்ந்ததாம். இந்நிலையில், தற்போது இந்த பூங்காவினை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.200 வசூலிக்கப்படவுள்ளது என்று அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிப்பார்க்க ரூ.1550 கட்டணம்
பூங்காவிற்குள் கேமரா எடுத்து செல்வதற்கான கட்டணம் ரூ.25ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்குள் பேட்டரி காரில் சுற்றிப்பார்க்க ரூ.1550கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாம். இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், பூங்காவினை மேம்படுத்தலாம் என்று அதிகாரியொருவர் கூறியதாக தெரிகிறது. விலங்குகள் பரிமாற்றம் செய்ததன் மூலம் தற்போது சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதேபோல் வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கி, காட்டுக்கழுதைகள் உள்ளிட்டவைகளும் சேர்க்கப்படவுள்ளது என்று தெரிகிறது. இப்பூங்காவில் உள்ள விலங்குகளுக்கான உணவிற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.6கோடி செலவாகும் பட்சத்தில், பராமரிப்பு பணிகள், அங்கு பணிபுரிவோருக்கான சம்பளம் ஆகியவற்றிற்கு ரூ.7கோடி செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. இக்கட்டண உயர்வு குறித்து மக்கள், கட்டண உயர்வு சற்று அதிகம்தான் என்றும், 5 பேர் கொண்ட குடும்பம் இங்கு வந்தால் ரூ.3000வரை செலவாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.