Page Loader
தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை
தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

எழுதியவர் Nivetha P
Mar 14, 2023
06:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பதால் இவரை அப்பகுதியில் பலரும் தோழர் என்றே அழைப்பார்களாம். அதேபோல் அவரது கடையும் தோழர் பழக்கடை என்றே அழைக்கப்படுகிறது. புத்தக வாசிப்பின் மீதுள்ள ஆர்வமும் அவசியத்தையும் புரிந்து கொண்டஇவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தலைவர்களின் வாழ்க்கைவரலாறு, சிறுவர் கதைகள், தமிழ்-ஆங்கில அகராதி போன்ற ஏதேனும் ஓர் சிறு புத்தகத்தினை இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து காஜா மொய்தீன் கூறுகையில், நான் 9ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தோழர் பழக்கடை

அன்பின் அடிப்படையில் புத்தகங்களை பரிசாக அளிக்கும் காஜா மொய்தீன்

தொடர்ந்து அவர் பேசுகையில், படிப்பினை நிறுத்தினாலும் புத்தகங்களை அதிகம் படிப்பேன். சிறுவயதில் இருந்தே இந்த தெருவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து வருகிறேன் என்று கூறினார். காதல் திருமணம் செய்துகொண்ட காஜா மொய்தீன் தன்னால் படிக்கமுடியவில்லை என்பதால் தனது மனைவியை படிக்க வைத்துள்ளார். பல இன்னல்களுக்கு பிறகு அவரது மனைவி அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றிவருகிறாராம். அவரது மகனும் வக்கீலாக உள்ளார், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தனது குடும்பத்தில் ஒருவராக கருதியே புத்தகங்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார். புத்தகம் மட்டுமின்றி தனது கடைக்கு வருவோருக்கு குங்கும சிமில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் அன்பின் அடிப்படையாக கொண்டு கடந்த 11 ஆண்டுகளாக வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.