Loading...
செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்! திருவண்ணாமலை கோவிலில் செல்போனுக்கு முழுத் தடை; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை கோவிலில் செப் 1 முதல் செல்போன் தடை

செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்! திருவண்ணாமலை கோவிலில் செல்போனுக்கு முழுத் தடை; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
04:46 pm

செய்தி முன்னோட்டம்

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வழிபாட்டு அமைதியைக் காக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் 1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருவறை மற்றும் முக்கிய சன்னதிகள் அருகில் நின்று செல்ஃபி எடுப்பது மற்றும் ரீல்ஸ்கள் செய்வதால் மற்ற பக்தர்களின் தரிசனம் தாமதமாவதைத் தவிர்க்கவே கோவில் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

5 இடங்கள்

5 இடங்களில் மொபைல் போன் வைப்பு மையங்கள் அமைப்பு

பக்தர்கள் கொண்டு வரும் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, கோவிலின் 4 பிரதான கோபுரங்களின் அருகிலும் மொத்தம் 5 இடங்களில் மொபைல் வைப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரு செல்போனுக்கு வெறும் ₹5 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொபைலை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு பிரத்யேக டோக்கன் வழங்கப்படும், தரிசனம் முடிந்து திரும்பும்போது அந்த டோக்கனைக் காட்டித் தங்களது போன்களை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

சட்ட நடவடிக்கை

தடையை மீறினால் செல்போன் பறிமுதல் மற்றும் சட்ட நடவடிக்கை

செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு யாராவது தடையை மீறி கோவிலுக்குள் செல்போனை மறைத்து எடுத்துச் சென்றால், அந்த சாதனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் எச்சரிக்கையையும் மீறி விதிகளை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கும் விடுதிகளிலேயே வைத்துவிட்டு வருவது தரிசனத்தை எளிதாக்கும்.

ADVERTISEMENT

தன்னார்வலர்கள் நியமனம்

பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் தன்னார்வலர்கள் நியமனம்

கோவில் வளாகத்திற்குள் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவசரத் தேவைகளுக்கு உதவவும் கூடுதல் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆன்மீக அமைதியைப் பேணவும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அனைவரும் எவ்வித இடையூறுமின்றி மன அமைதியுடன் சுவாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த புதிய நடைமுறைக்கு ஆன்மீக அன்பர்களும் உள்ளூர் மக்களும் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT