திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றம்
பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் சுவாமி கருவறைக்கு முன்னால் ஏற்றப்பட்ட இந்த பரணி தீப நிகழ்வை காண பலர் திரண்டிருந்தனர். இந்த 10 நாள் கார்த்திகை விழாவின் இறுதி நாளான இன்று, மாலை 6 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் தரிசனமும், அதன் பின்னர், அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை காண, 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.