மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது
செய்தி முன்னோட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று மாலை விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியே ஆக வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 258 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டன.
இருப்பினும், அப்போதைய திமுக அரசு தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.
இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற நீதிபதி அனுமதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தீபம் ஏற்றப்படுமா இல்லையா என்பது குறித்து மாநில அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
விளக்கம்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்
இதற்கிடையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்பது குறித்து நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காகவே அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்றும் உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
நீதிமன்ற விசாரணையின் போது வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த ஆண்டு நிச்சயமாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் எனப் பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மாலை நேரத்தில் வழக்கமான நடைமுறைப்படியே உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.