தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர்
தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வினை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாது மிக பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதில் 46 ஆயிரம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். இதில் பெரும்பாலானோர் இடையில் பள்ளியை விட்டு நின்றவர்கள் என்றும், 11ம் வகுப்போடு பள்ளிக்கே வராதவர்களுக்கும் சேர்த்து ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இது உண்மையென்னும் பட்சத்தில், திமுக கடந்த இரு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்கின்றனர் என்று தவறான விளம்பரத்தினை ஏன் வெளியிட்டது? என்பது குறித்து தமிழக கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளதா?
தொடர்ந்து பேசியஅவர், அரசு பள்ளிமாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுதோறும் சுமார் 70,000மதிப்பில் இலவச சீருடை, மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகங்கள், கட்டண சலுகை மற்றும் இதர சலுகைகளை தமிழகஅரசு செலவிடுகிறது. அதன்படி இடைநிற்றலால் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும் இத்தனை சலுகைகள் அளிக்கப்பட்டனவா? என்பதனை அரசு தெளிவுபடுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு கணக்கு காட்டப்பட்டிருக்கும்பட்சத்தில் இந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று உறுதியாக சொல்லமுடியும். இதன்படி, 46,000 * 70,000 பிளஸ்1 வகுப்பிற்கு 322 கோடி, பிளஸ்2 வகுப்பிற்கு 322கோடி என மொத்தம் 644கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதனை மறுக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் வருத்தம்தெரிவித்து பொறுப்பேற்றுகொள்ளவேண்டும் என்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.