சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியுற்ற பிறகு, உலகமே, சந்திரயான் 3 தரையிறக்கத்தை எதிர் நோக்கியுள்ளது. இந்த திட்டம் வெற்றியடையும்பட்சத்தில், சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றை உருவாக்கும் இந்தியா என்பது அறிந்ததே. ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. சந்திரயான்-3 ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்த லட்சிய சந்திர பயணத்தை சாத்தியமாகிய முக்கிய நபர்களைப் பார்ப்போம்.
சந்திரயான்-3-ன் மூளையாக செயல்பட்டவர்கள்
இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்: எஸ் சோமநாத், ஏவுகணை வாகன அமைப்பு பொறியியலில் நிபுணரான இவர், சந்திரயான்-3ஐ சுற்றுப்பாதைக்கு கொண்டு சென்ற ஏவுகணை வாகன மார்க்-3 ராக்கெட்டின் வடிவமைப்பிற்கு உதவினார். சோம்நாத் தனது தற்போதைய பணிக்கு முன், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். இஸ்ரோவிற்கான ராக்கெட் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை இந்த ஏஜென்சிகள் மேற்பார்வையிடுகின்றன. இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரியப் பயணமான 'ஆதித்யா-எல்1' மற்றும் இந்தியாவின் முதல் குழுவினர் பயணத்திற்கு தயாராகும் 'ககன்யான் ப்ராஜெக்ட்' ஆகியவற்றையும் அவர் மேற்பார்வையிடுகிறார் .
சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்
சந்திரயான்-3 திட்ட இயக்குநராக பி.வீரமுத்துவேல், 2019ல் பொறுப்பேற்றார். ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பி.வீரமுத்துவேல், 2019 இல் சந்திரயான்-3 திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார். மூன்று தசாப்தங்களாக இஸ்ரோவில் பணியாற்றியவர். சந்திரயான்-2 திட்ட இயக்குநராக இருந்த எம்.வனிதாவின் இடத்திற்கு வீரமுத்துவேல் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தியாவின் நிலவை நோக்கிய விண்வெளி பயணத்திற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண் வனிதா ஆவார். அவர் தற்போது UR ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) துணை இயக்குநராக உள்ளார். சந்திரயான்-3யின் பணி இயக்குனர் மோகன் குமார். இவர் விஎஸ்எஸ்சியில் உள்ள கலவைகள் தயாரிப்பின் தலைவராக உள்ளார்.
வேறு சில குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகள்
'இந்தியாவின் ராக்கெட் பெண்' என்று அடிக்கடி அழைக்கப்படும், ரிது கரிதால், சந்திரயான்-3க்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் இதற்கு முன்பு 'மங்கள்யான்' இயக்கத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மற்ற குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளில் VSSC இயக்குனர், எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் URSC இயக்குனர் எம்.சங்கரன் ஆகியோர் அடங்குவர். இந்தியாவின் செயற்கைக்கோள்களை வடிவமைத்து கட்டமைக்கும் பொறுப்பான யுஆர்எஸ்சி குழுவை சங்கரன் வழிநடத்துகிறார். அவரது நிபுணத்துவம் காரணமாக அவர் பெரும்பாலும் "இஸ்ரோவின் ஆற்றல் மையம்" என்று அழைக்கப்படுகிறார்.
சந்திரயான் 3 திட்டத்தில் இடம்பெற்ற பெண் பொறியாளர்கள்
சந்திரயான்-3க்கு 54 பெண் பொறியாளர்கள்/விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். பல ஆண் விஞ்ஞானிகளின் பங்கு பற்றி கூறப்பட்டிருந்தாலும், சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண் விஞ்ஞானிகள்/பொறியாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண்கள் இஸ்ரோவில், "பல்வேறு அமைப்புகளின் இணை மற்றும் துணை திட்ட இயக்குனர்கள் மற்றும் திட்ட மேலாளர்கள்" பதவிகளை வகிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான இளம் தொழில்நுட்ப வல்லுனர்களின் திட்டமிடலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது. இவர்களின் அபாரமான உழைப்பு தான், நம் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்க போகிறது என்பதை பெருமிதத்துடன் கூறிக்கொள்வோம் .