42வது பிறந்தநாள் கொண்டாடும் தல தோனி - வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் உள்ளிட்ட பதவிகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி அவர்கள் இன்று(ஜூலை.,7) தனது 42வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது வாழ்த்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்றென்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான 'தல' எம்எஸ் தோனி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண பின்னணியில் இருந்து வருவோருக்கு, உங்களின் சாதனைகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். முதல் பருவ ஏலத்திலேயே அதிக விலைக்கு போன வீரர் தல தோனி
மேலும் அவர்,"தல தோனியின் எண்ணற்ற சாதனைகள் அனைத்தும் தற்போதைய இளைஞர்களுக்கு ஊக்கத்தினை அளிக்கிறது. தன்னிகரற்ற தலைமை பண்பால் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் தோனி அவர்கள் தனது பணியினை தொடர்ந்து செய்ய வேண்டும்"என்றும் தெரிவித்துள்ளார். 'தல' தோனி பீகார் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். ஒருப்பக்கம் தனது படிப்பினை தொடர்ந்த தோனி, மறுபக்கம் தனது கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். 2005ம் ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் பங்கேற்று விளையாடினார். தொடர்ந்து, தோனி ஐ.பி.எல்.துவங்கியப்பொழுது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐ.பி.எல். முதல் பருவ ஏலத்திலேயே அதிக விலைக்கு போன வீரர் என்னும் பெருமையினை பெற்றவராவார்.