செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடக்கம்: யார் யாருக்கு தகுதி?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தவெக அரசு அமைந்து சுமார் 40 நாட்கள் கடந்த நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் எவ்வித தடையுமின்றி செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ. 755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான தங்கம் மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் தற்பொழுது கோரப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ - செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என அரசு அறிவிப்பு
— Sun News (@sunnewstamil) June 23, 2026
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இதற்கு தகுதிபெறுவார்கள் எனத் தெரிவிப்பு#SunNews | #TNGovt |… pic.twitter.com/Dvg8jJglsy
விவரங்கள்
'பேபி வெல்கம் கிட்' மற்றும் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாகத் தவெக தனது தேர்தல் பிரச்சாரத்தில் இத்திட்டத்தை அறிவித்திருந்தது. இதன்படி, அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். இதனுடன், குழந்தைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு 'பேபி வெல்கம் கிட்' இலவசமாக வழங்கப்படும். அதில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பொருட்கள், குழந்தை ஆடைகள், பேபி சோப்புகள், பேபி ஆயில் மற்றும் பவுடர், குழந்தைகளுக்கான கொசுவலைகள், விளையாடும் பொம்மைகள், தாய்மார்களுக்கான நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் உள்ளிட்டவை இருக்கும்.
தகுதி
திட்டத்திற்கான தகுதிகளும், பலன் தரும் தேதியும்
இத்திட்டத்தின் கீழ் யார் யாரெல்லாம் பயன்பெறலாம் மற்றும் எந்த தேதியில் இருந்து இது கணக்கிடப்படும் என்பதற்கான விதிகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி, ஜூன் 22 முதல் தொடக்க தேதியாக கணக்கீடு. அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் பிறந்தநாளான நேற்று (ஜூன் 22, 2026) முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெற்றோர்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாகக் குடியிருக்கும் குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' பொருந்தும்.