பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
பழனி முருகர் கோயிலில் நேற்று(ஜன.,30) தைமாத கிருத்திகை உற்சவவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதனையடுத்து 4,30 மணிக்கு விளாபூஜை, 8மணிக்கு சிறுகாலசந்தி பூஜை ஆகியன நடந்தது என்று கூறப்படுகிறது. பல சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் தொடர்ந்து நடந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு முருகருக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கூட்டம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடத்தப்பட்டது, 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு மற்றும் 7 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு தங்கரதத்தில் சின்னகுமாரர் புறப்பாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாட்டு வண்டியில் படையெடுத்து வந்த பொள்ளாச்சி பகுதி பக்தர்கள்
மேலும் பழனி கோயிலில் நேற்று முன்தினம்(ஜன.,29) தைப்பூச திருவிழா தொடங்கப்பட்ட நிலையில், பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர். இதனையொட்டி, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபொழுது, பக்தர்கள் பாதயாத்திரை வருவது போல் தாங்கள் பல தலைமுறையாக மாட்டு வண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்வதாக கூறினர். மேலும், பொள்ளாச்சியில் இருந்து நேற்று பழனி சண்முகநதிக்கு வந்து புனித நீராடிய இவர்கள், பின்னர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வந்ததாக கூறினர். சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் மீண்டும் மாட்டு வண்டியில் ஊருக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்பட்டது.