தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வுகள் அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுர மாவட்டத்தில் 13917 பிளஸ் 2 தேர்வினையும், 13114 பேர் பிளஸ் 1 தேர்வினையும் எழுதுவதையடுத்து தேர்வுக்காக 53 தேர்வுமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மார்ச்.,15) காலை பிளஸ்1 வகுப்பிற்கான பொதுதேர்வு 10 மணிக்கு துவங்கியது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அவர்களுக்கு உதவியாக கூறுவதை எழுத தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். திருப்புட்குழி அரசு மேல்நிலை பள்ளியில் ஒரு மாற்றுத்திறனாளி மாணவி தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் தேர்வினை எழுதி கொண்டுள்ளார். அந்த தேர்வறையின் கண்காணிப்பாளராக ஓரிக்கை பகுதியை சேர்ந்த பிரபல தனியார்பள்ளி ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் ஆசிரியரை தனித்தனியாக விசாரித்த போலீஸ்
அப்போது அவர் அந்த மாணவிக்கு உதவுவது போல், அந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. இதனால் அந்த மாணவி பதற்றமாக காணப்பட்டுள்ளார். பின்னர் அவர் தேர்வு முடிந்த பின்னர் இது குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இந்த புகார் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து அந்த மாணவி மற்றும் அந்த ஆசிரியர் ஜெகநாத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆசிரியரை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.