டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்?
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனமானது, தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியிருந்தது. ஊழியர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலக வேலையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெண் பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவது அதகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெண் பணியாளர்கள் தங்கள் பணியில் இருந்து விலகுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால், அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதை அமல்படுத்தியதையே முதன்மையான காரணமாக நான் கருதுகிறேன்", எனத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மில்லிண்டு லக்கட்.
அதிகளவில் வெளியேறும் பெண் பணியாளர்கள்:
அதிகளவில் பெண் பணியாளர்கள் பணியில் இருந்து விலகுவது, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் தங்கள் நிறுவனத்திற்கு பின்னடைவு தான், எனவும் தெரிவித்திருக்கிறார் மில்லிண்டு லக்கட். மேலும், கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இணைந்தவர்களில் 38.1% பெண் பணியாளர்களே. தற்போது அந்நிறுவனத்தில் பணிபுரியும் 6 லட்சம் ஊழியர்களில் 35% பெண் பணியாளர்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். கடந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிகளில் 4-ல் ஒரு பங்கு பதவிகளில் பெண் பணியாளர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்நிறுவனத்தில் தற்போது பணியிலிருந்து விலகிய பெண் பணியாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தெளிவான கணக்கு அளிக்கப்படவில்லை.