
வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், பணியமர்த்தலுக்காக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் என்பவர் புதிதாக, இந்த மாதத் தொடக்கத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
புதிய தலைமை மாறியதையடுத்து, விசில் ப்ளோவர் (Whistle Blower) ஒருவர், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தலுக்காக, அந்நிறுவனத்தைச் சேர்ந்த E.S.சக்கரவர்த்தி என்பவர் லஞ்சம் பெறுவதாக, சிஇஓ(CEO) மற்றும் சிஓஓ-விடம் (COO) சுட்டிக் காட்டியிருக்கிறார்.
1997-ல் இருந்து டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சக்கரவர்த்தி, தற்போது அந்நிறுவனத்தின் பணியாளர்கள் நிர்வாகப் பிரிவான Resource Management Group (RMG)-ன் உலகளாவிய தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரை விடுமுறையில் அனுப்பியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.
டிசிஎஸ்
லஞ்சம் பெற்ற பணியாளர்கள் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்:
டிசிஎஸ் நிறுவனமானது புதிய ஊழியர்களை, ஒப்பந்த நிறுனங்கள் மூலமே தேர்வு செய்யும்.
அப்படி புதிய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனத்தில் நியமிக்க, டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் நிர்வாகப் பிரிவான RMG-யின் சில முக்கிய அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றிருக்கின்றனர்.
வருடத்திற்கு 50,000 ஊழியர்கள் வரை புதிதாக பணியமர்த்தப்படும் டிசிஎஸ் நிறுவனத்தில், ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் புதிதாகப் பணியர்த்த ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, அந்தப் பிரிவைச் சேர்ந்த நான்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, மூன்று ஒப்பந்த நிறுவனங்களை ப்ளாக்லிஸ்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருக்கிறது டிசிஎஸ். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்திருக்கிறது அந்நிறுவனம்.