
ஐ லவ் முஹம்மது சர்ச்சையை தொடர்ந்து உத்தரப்பிதேச மதகுரு தௌகீர் ரஸா கான் கைது; 1,700 பேர் மீது வழக்கு
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் ஐ லவ் முஹம்மது பிரச்சாரத்தை ஆதரித்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில், உள்ளூர் மதகுருவும் இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான மௌலானா தௌகீர் ரஸா கான் சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, இந்த கவுன்சிலின் தலைவர் ரஸா கான், இந்தப் பிரச்சாரத்தை ஆதரித்து ஒரு வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வெளியே ஏராளமானோர் கூடி, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தக் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் எறிதலில் ஈடுபட்டதாகவும், கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை தடியடி நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
இந்த மோதலின்போது குறைந்தது 10 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் ஒழுங்கைக் குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கலவரம் செய்தல், அரசுப் பணியைத் தடுத்தல் மற்றும் காவல்துறையினரைத் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,700 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகப் பரேலியில் போஸ்டர்கள் தொடர்பாக நிலவி வந்த தொடர்ச்சியான பதற்றத்தின் சமீபத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது.