பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று(ஜூலை.,26) நடந்த நிலையில், அதனை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,"வாக்காளர்கள் மத்தியில் திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள் அனைத்தையும் கொண்டு சேர்ப்பது, வாக்காளர் பட்டியல்களை சரிபார்ப்பது, வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க செய்வது உள்ளிட்ட மூன்றும் மிக முக்கியமான பணியாகும்" என்று கூறினார். தொடர்ந்து, "இதற்காக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வாக்காளர்களின் குடும்ப உறுப்பினர் போல் அவர்களோடு இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்" என்றும் அறிவுரை வழங்கினார் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி வெல்லும் - முதல்வர்
மேலும் வாரிசு அரசியல் என்னும் புளித்து போன புகாரினை பிரதமர் மோடி தொடர்ந்து வைத்து வருவதாக விமர்சித்த தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமியினை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து மோடி பேசி வருகிறார் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, 2024ம் ஆண்டில் மீண்டும் பாஜக ஆட்சியினை பிடித்தால், நிச்சயம் தமிழ்நாடே இருக்காது என்று ஆவேசமாக பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி வெல்லும் என்று உறுதியாக கூறியுள்ளார். அதே போல், திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவேண்டும் என்றும், பாஜக வெற்றிபெறுவதினை தடுக்க தேவையான அனைத்து செயல்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.