17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை!
மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததை அடுத்து மூன்று நாட்களுக்கு(டிசம்பர் 12,13,14) தொடர்ந்து மிதமான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது. அதனால், இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். மேலும், லேசான மழைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
17ஆம் தேதி வரை மழையா?
புதிதாக அரபிக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 17ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கல் உள்ளிட்ட இடங்களின் சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காற்றழுத்ததால் லட்சதீவு, கேரள - கர்நாடக கடலோரங்கள், மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதனால், அதுவரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.