தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா? என சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் தனது விளக்கத்தினை அளித்துள்ளார். அதன்படி, காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை. தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆய்வு மேற்கொள்ள வற்புறுத்தியுள்ளதாக தகவல்
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் முன்னதாக சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்ஃபுளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவலுக்கு பிறகு இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து இதய நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.