'திமுக இருக்கிற இடத்துலதான் தப்பு நடக்கும்': சர்காரிய கமிஷன் முதல் டாஸ்மாக் ஊழல் வரை சட்டசபையில் முதல்வர் விஜய் வெறித்தனமான உரை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சியின் ஊழல்கள், அமலாக்கத்துறை அறிக்கைகள் மற்றும் சர்காரிய கமிஷன் விவரங்களைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியான திமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'தாலிக்கு தங்கம்', 'அம்மா இருச்சக்கர வாகனம்' உள்ளிட்ட முந்தைய அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஏன் ரத்து செய்தனர் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஊழல் என்று பேசினாலே திமுகவினர் பதற்றமடைந்து ஆதாரங்களைக் கேட்கத் தொடங்கிவிடுவதாகக் கூறினார். "நாற்காலிக்காக நான் இங்கு வரவில்லை, மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்துள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
கரூர்க் கேங்
டாஸ்மாக் விவகாரம் மற்றும் 'கரூர்க் கேங்' குற்றச்சாட்டு
டாஸ்மாக் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளும் 'ரத்தீஸ்' என்பவரும் இணைந்து செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தவெக அரசு அமைந்தவுடன் ரத்தீஸ் ஏன் துபாய்க்குச் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
"திமுக இருக்கும் இடத்தில்தான் தவறு நடக்கும்; தவறு நடக்கும் இடத்தில்தான் திமுக இருக்கும்" என்று சாடிய அவர், பார் உரிமையாளர்களிடம் பெற்ற 'பார்ட்டி ஃபண்ட்' நேரடியாக திமுக தலைமைக்கே சென்று அடைந்துள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சர்காரிய கமிஷன்
சர்காரிய கமிஷன் முதல் தற்போதைய ED அறிக்கைகள் வரை அம்பலம்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை அளித்த கோப்புகளையும், வரலாற்றுச் சிறப்புமிக்க சர்காரிய கமிஷன் அறிக்கையையும் அவையில் மேற்கோள் காட்டிப் பேசிய முதலமைச்சர், வீராணம் திட்டத்தில் கமிஷன் பெற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது பதவியைத் தவறாக பயன்படுத்தியதாகச் சர்காரிய கமிஷனில் குறிப்பிடப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் பெறப்பட்டதாகவும், இதன் மூலம் நேரடியாக பலனடைந்தது மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும்தான் என அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவையில் குற்றம்சாட்டினார்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் நாகரிகம்
கண்ணதாசனின் "பேசிய பழகிய பொய்... வாங்கி பழகிய கை" என்ற வரிகளைக் குறிப்பிட்டு திமுகவை விமரிசித்த முதலமைச்சர், அரசியலுக்காகப் பெண்களை தரம் தாழ்த்திப் பேசுவதைக் கடுமையாகக் கண்டித்தார்.
ஜெயலலிதா சட்டமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, பெண்களை அசிங்கமாகப் பேசுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும், காவல் மரணங்களை ஏற்க முடியாது என்றும், போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் அரசு எந்தச் சமரசமும் செய்யாது என்றும் உறுதியளித்தார்.