LOADING...
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு

ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 02, 2026
12:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. நேற்றைய தினம் (ஜூலை 1) மதுரை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டியெடுத்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாலும், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு குஜராத் முதல் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூலை 3ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C - 29°C ஆக இருக்கக்கூடும்.

Advertisement